தேர்தல் சிறப்புக் கட்டுரை-தமிழ்நாடா ? இலவச நாடா ?

தமிழகத்தின் இரண்டு பெரிய திராவிட கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையைப் படித்த பின்பு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாய்த் தெரிகிறது. பதவியைப் பிடிக்க இவர்கள் “எந்த” எல்லைக்கும் போவார்கள்.


தானாக கனிந்து வந்த வாய்ப்பை, தானாக தன்னிச்சையாக முடிவெடுத்து, வைகோவை துரத்திவிட்டு, தான் இன்னும் திருந்தவில்லை என்பதை அழுத்தமாய் நிருபித்த ஜெயலலிதாவின் போக்கு சோர்ந்து கிடந்த கலைஞருக்கு வசதியாய்ப் போய்விட்டது. மக்கள் நமக்கு லஞ்சம் தந்த காலம் மாறி, நாம் மக்களுக்கு லஞ்சம் தந்து சென்ற முறை ஆட்சியைப் பிடித்ததைப் போல் இந்த முறையும் பிடிக்கலாம், இன்னும் அதிகமாய் லஞ்சம் தந்து…. என்றெண்ண வைத்துவிட்டது.


சென்ற முறை, கலைஞருக்கு முன்னமே தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜெயலலிதா, இந்த முறை பொறுமையாய் காத்திருந்தார், ‘கதாநாயகியை’ மிஞ்சும் தாராளம் காட்ட…!


கலைஞர் தனது முதல் தேர்தலில் (1957) குளித்தலையில் ஆளுங்கட்சி வேட்பாளரை எதிர்த்து நின்றார். அப்போது ஆளுங்கட்சி வேட்பாளர் அப்பகுதி மக்களுக்கு குடங்களை இலவசமாய் தந்தார். இதைக் கண்ட ஏழை கருணாநிதி, “அந்த வேட்பாளர் வசதியானவர். குடம் தந்தார். என்னால் இந்தக் குடத்தில் தூசி விழாமல் தடுக்கும் மூடியைத்தான் தர முடியும். ஆனால் மறவாதீர்கள்….உங்கள் வாழ்க்கை முழுமைக்கும் இந்த மூடியைப் போல் நான் உங்களைப் பாதுகாப்பேன்” என்று சொல்லி வெற்றிப் பெற்றார். என்ன வினோதம்….அன்று மூடி…இன்று கோடி…! இதுதான் வளர்ச்சி என்பதா?


லாப்டாப் இலவசம்; பஸ் பாஸ் இலவசம்; அரிசி இலவசம்; மிக்ஸி இலவசம்; கிரைண்டர் இலவசம்; காற்றாடி இலவசம்; வீடு இலவசம்; ஆடு இலவசம்; மாடும் இலவசம்……கேடும் இலவசம்!!!! இது தமிழ்நாடா ? இலவச நாடா ?


மக்கள் நலத்திட்டப் பணிகளில் மட்டும் இந்த அரசியல்வாதிகள் எப்போதும் செய்வதை திருந்தச் செய்வதே இல்லை. அரிசி, மிக்ஸி, கிரைண்டர் இவற்றை இலவசமாய் கொடுத்துவிட்டால் போதுமா? மக்கள் அரிசியை ஊற வைக்க வேண்டும்; மாவாட்ட வேண்டும்; பின் சமையல் செய்ய வேண்டும்….எவ்வளவு வேலை? இதற்கு பதிலாய் வரப்போகும் அரசு, நேரடியாய் இட்லியும் கெட்டி சட்னியும் ஒவ்வொரு வீட்டுக்கும் விநியோகித்தால் என்ன? மக்கள் இன்னும் மகிழ்வார்கள் இல்லையா?


ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையப் படித்து விட்டு, மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தைகள் இவை –


” இந்த திட்டங்கள் எதையும் நிறைவேற்ற முடியாது. ஆட்சிக்கு வர மாட்டோம் என்ற நம்பிக்கையில் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார் ஜெயலலிதா. இவைகளை நிறைவேற்ற ஏது பணம்? “


அதைத்தானய்யா நாங்களும் கேட்கிறோம். ஜெயலலிதாவின் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதெனில் உங்கள் வாக்குறுதிகளை மட்டும் எப்படி நிறைவேற்ற முடியும்? உங்கள் தேர்தல் அறிக்கையின் மேம்படுத்தப்பட்ட அறிக்கை தானே அதிமுகவினுடயது. இதை நிறைவேற்ற எங்கிருக்கு பணம்? டாஸ்மார்க் விற்ற பணம் தான் இதற்கெல்லாம் மூலதனமா?


“கள், சாராயக் கடைகளைத் திறந்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் தான் நான் ஆட்சியில் தொடர வேண்டும் என்றால், துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு நடையைக் கட்டுவேன். கள், சாராயக் கடைகளைத் திறப்பது என்ற பேச்சுக்கு என்னுடைய ஆட்சியில் இடமே இல்லை” – இதைச் சொன்னது, உங்கள் தலைவர்களின் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அவரது கொள்கையின் படி ஆட்சி செய்வதாய் மார்தட்டும் நீங்கள் இதை வசதியாய் மறந்தது ஏன்?

வருவாய் கோடி கோடியாய் கொட்டக் கூடிய துறைகள் பல உண்டு. தவறான வழியில் ஓர் அரசு தன் வருவாயை பெருக்கலாம் எனில், தவறான வழிகள் “அனைத்திலும்” ஓர் அரசு ஈடுபடலாமா? அரசின் முதலீடுகளும், வருமானங்களும் கொள்கை சார்ந்து இருக்கத் தேவையில்லை?


ஏற்கனவே தமிழ்நாட்டின் கடன் ஒரு லட்சம் கோடி (ஸ்பெக்ட்டரத்தில் அடித்ததது இதை விட அதிகம்) ! நீங்கள் அறிவித்த இலவச திட்டங்கள் அனைத்தும் அமல்படுத்தப்பட்டால், நமது கடன் மூன்று லட்சம் கோடியாய் அதிகரிக்கும். உங்கள் புண்ணியத்தில் ஒவ்வோரு தமிழனும் 45,454 ரூபாயை தன் கடனாய் சுமப்பான். நாளை ஒரு நேர்மையாளன் ஆட்சிக்கு வந்தால், உங்கள் இலவச திட்டங்கள் அனைத்தும் தூக்கி எறியப்படும். வரி உயர்த்தப்படும். இந்தக் கடன் அனைத்தும் இலவசங்களில் மயங்கும் மக்கள் தலையில் நாளை இடியாய் இறங்கும்! அப்போது அந்த நேர்மையாளனை சிலர் தூற்றவும் செய்வார்கள்! அதைப்பற்றி உங்களுக்கென்ன கவலை?


இத்தனை ஆண்டு கால ஆட்சியில், கொள்ளையடித்ததைத் தவிர நீங்கள் சாதித்தது என்ன? உங்களின் தீர்க்கதரிசனத்தால் மக்களை கையேந்திகள் ஆக்கியது தான் மிச்சம்!


ஆயிரம் சொன்னாலும் உங்களின் நிர்வாகத் திறனை பாராட்டித்தான் ஆக வேண்டும். அரசு அறிவிக்கும் திட்டங்கள் நேரடியாய் மக்களிடம் சென்று சேர்கிறதோ இல்லையோ…நீங்கள் லஞ்சமாய்த் தரும் பணம் மட்டும் இடைத்தரகர்களால் சுருட்டப்படாமல் நேரடியாய் மக்களை சென்றடைகிறது. அதைக் கண்காணிக்க தனித்தனி குழுக்கள் வேறு! யப்பா…..மலைக்க வைக்கும் நிர்வாகம்!


பொறுப்புடன் செயல்படும் கட்சிகளைப் பார்த்தால் எங்களுக்கு வெறுப்பு தான் மிஞ்சுகிறது.


உழைத்துண்ணும் சந்தோஷம் தெரியுமா உங்களுக்கு? இதை மறக்கடித்த உங்கள் ஆளுமையை எப்படி மெச்ச? நீங்கள் வாழிய பல்லாண்டு!


ஓர் சின்ன வேண்டுகோள் –
நீங்கள் நாற்காலியில் அமர, மக்களை சோம்பேறிகள் ஆக்கிவிட்டீர்கள். இனி ஒரு போதும் உங்களைத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளாதீர்கள்!

தலை இருப்பவன் எல்லாம் தலைவன் இல்லை!
தேசத்தை தழைக்கச் செய்பவனே தலைவன்!

Thanx:Idhayakumar.K

COMMENT பகுதியில் உங்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.